ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
8/9/2025 4:58:49 PM
சென்னை: பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என்று கூறி தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஜிஎஸ்டி கூடாது என்று கூறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவிற்கான ஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும். அது இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்று கோஷம் எழுப்பினர்.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சங்கரன் கூறியதாவது: 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வருவதற்கு முன்னதாக பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களுக்கு உற்பத்தி வரி விதிக்கப்படவில்லை. ஐந்து சதவீதம் வாட் வரி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் கழிவுகள் இரண்டு வகையாக உள்ளன. அவை தொழிற்சாலையில் இருந்து பெறப்படும் கழிவுகள், தெருக்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள். தெருக்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் தெருக்களில் பிளாஸ்டிக் குப்பை எடுப்பவர்களுக்கான வருவாய் குறையும். இதனால் தெருக்களில் பிளாஸ்டிக் குப்பை தேங்கும்.
நம் நாட்டில் 60 முதல் 70 சதவீதம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது. தெருக்களில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 18 சதவீதம் வரி விதித்தது, தூய்மை இந்தியா திட்டத்துக்கு எதிரானது. மேலும் தெருக்களில் சேரும் குப்பை, கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவு செய்கின்றன.
அதனால் இந்த மறு சுழற்சி செய்யும் தொழிலுக்கு வரி விதிக்கக்கூடாது. இது இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை நேரடியாக பாதிக்கின்றது. மத்திய அரசுக்கு எங்களின் நியாயமான கோரிக்கை, அதன் நியாயம் தெரிய வேண்டும் என்றே 18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்