சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக அணிகள் இணைய பாஜ கெடு
8/9/2025 4:52:10 PM
சென்னை: அதிமுகவில் 3 பிரிவுகளாக உள்ள அணிகளில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைய பாஜ கெடு விதித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். ஆனால் சசிகலா தனக்குப் பதில் கட்சியை வழி நடத்த டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார். ஆனால் தினகரன் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்ததால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அவரை கட்சியில் ஓரங்கட்டி வைத்தனர்.
இந்தநிலையில், அதிமுகவின் இரு பெரும் அணிகளான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைய இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த குழுவை திடீரென ஓ.பன்னீர்செல்வம் கலைத்தார். இதற்கிடையில், டெல்லி பாஜ தலைவர்களிடம் பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே ஆதரவு இருந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு முழுமையான ஆதரவை கொடுக்க ஆரம்பித்ததால், பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு டெல்லியிலும், தமிழகத்திலும் சரியத் தொடங்கியது. இதனால் அணிகள் இணைப்பு குறித்து இரு அணிகளின் தலைவர்களும் தீரவிம் காட்டினர்.
ஆனால் முதல்வர் பதவி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டதால் இணைப்பு பேச்சுவார்த்தை முடங்கியநிலையில் இருந்தது. இந்தநிலையில் 2 முறை டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக சென்றனர். ஆனால் இருவரும் பேசவில்லை. இதை கவனித்த பாஜ மேலிடம், தற்போது எடப்பாடி அணிக்குத்தான் செல்வாக்கு உள்ளது. இதனால் பன்னீர்செல்வம் அணி விரைவில் எடப்பாடி அணியுடன் சேர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இதற்கான காலக்கெடுவை பாஜ ரகசியமாக பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக இணைப்பு இல்லை என்று பன்னீர்செல்வம் கூறி வந்தாலும், இணைப்பை எப்படி நடத்துவது, என்ன கோரிக்கை வைப்பது என்பது குறித்து தனக்கு நெருக்கமாக உள்ள கே.பி.முனுசாமி, மைத்ரேயன், தனது மகன் ரவீந்திரன் ஆகியோருடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் விரைவில் எடப்பாடி பழனிச்சாமியுடன் பன்னீர்செல்வம் இணைப்பு குறித்து நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த இணைப்பு நடைபெறாவிட்டால், பன்னீர்செல்வம் அணியை பாஜவுடன் இணைக்க வேண்டும் என்றும் பாஜ வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் தினகரன், சசிகலா இல்லாத அதிமுகவை உருவாக்க இரு அணியினரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வதிடம் பாஜ தலைவர்கள் இந்த முறை வற்புறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.