விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சைக்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் வசதி அதிகரிப்பு: மத்திய அரசு முடிவு
8/8/2025 4:49:40 PM
புதுடெல்லி: விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், நெடுஞ்சாலையில் 50 கிமீ இடைவெளியில் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிவேகம், விதிமுறைகளை கடைபிடிக்காதது, மதுகுடித்துவிட்டு வாகன ஓட்டுவது போன்றவற்றால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த 2015ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துக்களில், 51 ஆயிரத்து 204 பேர் உயிரிழந்துள்ளனர். 1.45 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் சிக்கியோரை காப்பாற்றவும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 கிமீ தொலைவில் ஒரு ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்க கிரேன் ஆகியவற்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், விபத்து நடந்த 10, 15 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மருத்துவ உதவி, மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் விதமாக, அருகேயுள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர விபத்துகளை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளில் ரோந்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுகிறது. போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால், விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.