வால்மீகி சமூகத்தினர் அவமதிப்பு வழக்கில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கைது வாரன்ட்: பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி
8/8/2025 4:47:22 PM
லூதியானா: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அவ்வப்போது பரபரப்பாக பேசி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேட்டி அளித்த போது வால்மீகி சமூகத்தினரை பற்றி தரக்குறைவாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்தன. ராக்கி சாவந்துக்கு வால்மீகி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி வக்கீல் நரீந்தர் அதியா என்பவர் பஞ்சாப் நீதிமன்றத்தில் ராக்கி சாவந்த் மீது வழக்கு தொடர்ந்தார். ராக்கி சாவந்தின் பேச்சு வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை பாதிப்பதாக அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கில் ராக்கி சாவந்த் வக்கீல்கள் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குர்பீர் சிங்கை அணுகி மனு தாக்கல் செய்தனர். அதில் தற்போது ராக்கி சாவந்த் அமெரிக்காவில் இருப்பதால் வழக்கில் ஆஜராக முடியவில்லை. எனவே ஜாமீனை நீட்டித்து வழங்க வேண்டும் என கோரினர். இதையடுத்து கடந்த 5ம் தேதி முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் நேற்றைக்குள் அவர் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமீன் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராக்கி சாவந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த வழக்கில் ஆஜராக கோரி பலமுறை ராக்கி சாவந்த்துக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய கோரி வாரண்ட் பிறப்பித்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விஷாவ் குப்தா உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மோடி படம் அச்சடிக்கப்பட்ட உடையை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் ராக்கி சாவந்த் என்பது குறிப்பிடத்தக்கது.