தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை
8/8/2025 4:10:29 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தானகுமார். மாநகர போக்குவரத்து பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராமகிருஷ்ணன் (25). இவர் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வருகிறார். தந்தையின் வீட்டருகே இவரது வீடும் உள்ளது.
நேற்று முன்தினம் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் எப்போதும்வென்றானில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 1 மணிக்கு போக்குவரத்து பணி முடிந்து இன்ஸ்பெக்டர் சந்தானகுமார் தனது மகன் வீட்டை பார்த்து, கடந்து சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் அவர் ராமகிருஷ்ணன் வீட்டை பார்த்தபோது, முன்பக்க கதவு உடைத்து திறக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த ராமகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைத்து திறக்கப்பட்டு 20 பவுன் தங்க நகைகள், 2 ஜோடி வெள்ளிக்கொலுசுகள், ஒரு செல்போன் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ,.5 லட்சம் ஆகும். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதியில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.