எம்பிபிஎஸ் - மாநில பாடதிட்ட மாணவர்களுக்கான 85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து
7/14/2017 3:42:26 PM
சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு தமிழக அரசின் எதிர்ப்பால், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வு முறைதான் என்று மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்பதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக இருந்ததால், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்குட்பட்டு நீட் தேர்வு அடிப்படையில் நாடு முழுவதும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.
இதில், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில், கடந்த 22ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி தனியார் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களில் 85 சதவீதம் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள 15 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ பாடத்திடத்தில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற உள் ஒதுக்கீடு எங்களைப் போன்ற சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு இடம் கிடைப்பதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நடைமுறை இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளுக்கு முரணானது எனவே, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் தமிழக அரசு நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. பதில் மனுவில், உள் ஒதுக்கீடு என்பது மாநில அரசின் உரிமை. மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நளினி சிதம்பரம் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் வாதிடும்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த 2010ல் வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு முரணாக தமிழக அரசு ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த ஏராளமான மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு தரவேண்டும் என்ற ஆணைகளை ரத்து செய்துள்ளது. மாணவர் சேர்க்கையில் பாரபட்சம் காட்டாமல் நீட் தேர்வின் அடிப்படையிலும், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எனவே, தமிழக அரசின் இந்த உள் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.
அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆஜராகி, நீட் தேர்வுக்கு தமிழக அரசு முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 80 ஆயிரம்பேர் தேர்வு எழுதினர். இதில் 2000 பேர் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ மாணவர்கள் 2000 பேர் தேர்வு எழுதியதில் 520 பேர் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் உள் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக சேர்க்கை கிடைக்கும் என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ரவிச்சந்திரபாபு இன்று தீர்ப்பளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு முரணாக எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. மருத்துவ கவுன்சில் விதிகளில் ஏற்கனவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வாதங்கள் ஏற்கப்படுகின்றன. எனவே, மருத்துவ படிப்பில் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணையை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. இந்த உத்தரவு மனுதாரர் மட்டும் அல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். தமிழக அரசு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை புதிதாக மெரிட் பட்டியலை தயாரித்து சேர்க்கை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.