3 நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்றதில் மோதல் : கவர்னர், சபாநாயகர் டெல்லியில் முகாம்
7/11/2025 4:10:12 PM
புதுச்சேரி : புதுவையில் 2016 பொதுத்தேர்தலில் வென்ற காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியமைத்து வருகிறது. இதனிடையே மாநில அரசின் பரிந்தரையின்றி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 23ம்தேதி சாமிநாதன், சங்கர், செல்வகணபதி என்ற 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனிடையே 3 பேர் நியமன எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டது புதுவை அரசிதழில் தலைமை செயலரால் வெளியிடப்பட்ட நிலையில் கவர்னர் கிரண்பேடி ரகசியமாக 3 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை சபாநாயகர் வைத்தியலிங்கம் ஏற்கவில்லை. அவர்கள் மூவரும் கடந்த வாரம் சட்டசபை செயலரை சந்தித்து தங்களை அங்கீகரித்து சட்டசபையில் இருக்கை, தனி அறை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த சட்டசபை செயலர், இவ்விவகாரத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவெடுக்க முடியும் என்றார்.
இதனிடையே கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ் மூலமாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயருக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் அனுப்பினார். அதில், பாஜகவைச் சேர்ந்த 3 பேரும் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அவர்களை எம்எல்ஏக்களாக அங்கீகரித்து பணியாற்ற அனுமதிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம், சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் வழங்கினார். அதை படித்து பார்த்த சபாநாயகர், கவர்னரின் கடிதத்தை திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். புதுவை சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் பெரும் குழப்பும் ஏற்பட்டுள்ளது. நாங்கள்தான் நியமன எம்எல்ஏக்கள் என்று கவர்னர் கிரண்பேடியால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நபர்களுக்கு மாற்றாக அதே பெயர் கொண்ட நபர்கள் சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ள நிலையில் கவர்னர் கிரண்பேடி இவ்விவகாரம் தொடர்பாக முறையிட நேற்று டெல்லி விரைந்தார்.
அங்கு முகாமிட்டுள்ள கிரண்பேடி, குடியரசு தலைவரை மட்டுமின்றி மத்திய உள்துறையிடமும் இதுதொடர்பாக முறையிட உள்ளார். இதனிடையே நேற்று மாலை திடீர் பயணமாக சபாநாயகர் வைத்திலிங்கமும் டெல்லி விரைந்துள்ளார். 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கவர்னரும், சபாநாயகரும் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் புதுவை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.