திருச்சியில் காதலி வீட்டில் காதலன் மர்ம சாவு : மறியல்-தடியடி; போலீஸ் மீது கல்வீச்சு
7/11/2025 3:57:39 PM
திருவெறும்பூர் : திருச்சி வாழவந்தான்கோட்டை பழைய பர்மா காலனியை சேர்ந்த ராஜு மகன் மணிவேல் (21). வெல்டர். இவரும், இதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கிடையே மணிவேல் வெளிநாடு சென்றார். தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி காதலி, மணிவேலுக்கு போன் செய்தார். மணிவேல் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தார். காதலிக்கு 23ம் தேதி வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணிவேல் காதலியின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டார். அவர்கள் மறுத்ததுடன் வீட்டை பூட்டிவிட்டு மகளை உறவினர் வீட்டில் விட்டிருந்தனர். இந்நிலையில், மணிவேல் காதலிக்கு போன் செய்து ‘நான் உன் வீட்டில் தான் இருக்கிறேன். நீ வராவிட்டால் செத்து விடுவேன்’ என கூறியுள்ளார். காதலி உடனடியாக தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது அங்கு மணிவேல் தூக்கில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றபோது ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மணிவேலின் பெற்றோர் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, துவாக்குடி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் மனுவை வாங்க மறுத்து நாங்கள் சொல்வதை புகாராக எழுதிக்கொடுத்தால் மனுவை பெற்றுக்கொள்வோம் என்று கூறினர்.
ஆத்திரமடைந்த மணிவேல் உறவினர்கள் நேற்று மாலை துவாக்குடி- திருநெடுங்குளம் சாலையில் வாழவந்தான்கோட்டையில் சாலைமறியலிலும், பின்னர் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் டிஎஸ்பி(பொறுப்பு) புகழேந்தி வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் கைவிடப்படாததால், அங்கு வந்த அதிவிரைவுப்படையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். பொதுமக்கள் போலீஸ் மீது கல்வீசி தாக்கினர். அங்கு வந்த திருவெறும்பூர் தாசில்தார் ஷோபாவிடம், மணிவேல் சாவுக்கு காரணமான பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி விட்டனர். இரவு 8 மணியளவில் எஸ்பி கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கூறியதையடுத்து மறியல் முடிவுக்கு வந்தது.