கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறை உள்பட 15 இடங்களில் கடையடைப்பு
7/11/2025 3:53:38 PM
திருவிடைமருதூர் : தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாயில் கடந்த 30ம் தேதி கசிவு ஏற்பட்டது. இதையடுத்து எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். இதில் 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்கக்கோரியும், எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராகவும் கடந்த 1ம் தேதி முதல் கடையடைப்பு, வாடகை வாகனங்களை இயக்காமல் காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று மயிலாடுதுறை மெயின் சாலை சிவராமபுரத்திலிருந்து திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினர். விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு கதிராமங்கலம் அய்யனார் கோயிலை அடைந்தனர். அங்கு பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இந்நிலையில், கதிராமங்கலம் பகுதியில் இன்று 11ம் நாளாக கடையடைப்பு நடக்கிறது. வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. போராட்டத்தை ஆதரித்து இன்று கதிராமங்கலத்தை சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருபுவனம், சோழபுரம், பந்தநல்லூர், திருப்பனந்தாள், ஆடுதுறை, நாகை மாவட்டம் மயிலாடுதுறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவையினர் இன்று கடைகளை அடைத்தனர். இன்று காலை கும்பகோணம் காந்தி பார்க் முன் திரண்டு, கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பேரவை மாநில இணை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.