ஓபிஎஸ் அணியினர் எங்கள் பக்கம் வருவார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
7/11/2025 3:51:38 PM
சென்னை : ஓபிஎஸ் அணியினர் எங்கள் பக்கம் வருவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதையொட்டி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி வணங்கினர். இதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா எப்போதும் மீனவர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். மீனவ சமூக மக்கள் முன்னேற பல திட்டங்களை கொண்டுவந்தார். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அதிக நிதி ஒதுக்கினார். ஜெயலலிதாவின் லட்சியங்கள்தான் எங்கள் எண்ணங்களாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசு ஜெயலலிதா வழியில் செயல்படுகிறது.
சட்டமன்றம் நடைபெறுவதால் மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்து இங்கு பேச முடியாது. இடிந்தகரை மீன்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா என ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதன்படி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இடிந்தகரை மீன்கள் வாங்கப்பட்டது. மன அமைதியை பேணிகாக்கும் வகையில் அலங்கார மீன்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘எங்களை பொறுத்தவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். கட்சியினரிடையே ஒற்றுமை வேண்டும். அதிமுக 100 ஆண்டு வாழ வேண்டும். ஓபிஎஸ் அணியினர் மீண்டும் எங்கள் பக்கம் வருவார்கள் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை’ என்று ஜெயக்குமார் கூறினார்.