ஓட்டு போடுவதை கட்டாயமாக்க முடியாது : மத்திய அரசு விளக்கம்
7/10/2025 3:39:18 PM
புதுடெல்லி : ஓட்டு போடுவதை கட்டாயமாக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க கோரி சத்தியபிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் ஏற்கனவே இது போன்ற நடைமுறை அர்ஜென்டினா, பெல்ஜியம், பிரேசில் போன்ற நாடுகளில் இருப்பதாக சுட்டி காட்டியிருந்தார். மேலும் நாட்டிலேயே குஜராத்தில் மட்டுமே கட்டாய வாக்களிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் சுட்டி காட்டியிருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில், ஓட்டு போடுவதை கட்டாயமாக்க முடியாது. அது ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாட்டில் உள்ள சட்டமானது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டு போட உரிமை அளித்துள்ளதை போலவே அதை மறுப்பதற்கான உரிமையையும் அளித்துள்ளது என்று தெரிவித்திருந்தது.
இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், கருத்து சுதந்திரம் என்பது ஓட்டு போடுவதற்கான உரிமை மட்டுமல்ல, போடாமல் இருப்பதற்கான உரிமையும் உண்டு என்று சுட்டி காட்டியது. மேலும் ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்றின் மூலமாகவே யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டன் வாக்கு இயந்திரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் தேர்தல் ஆணையம் அதில் சுட்டி காட்டியிருந்தது.
மேலும் ஓட்டு போடுவதை கட்டாயமாக்குவதன் மூலம் பொது மக்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் என்று கூறும் மனுதாரரின் கூற்றையும் ஏற்க முடியாது. ஓட்டு போடுவது உரிமைதானே தவிர அதை கடமை அல்ல. அதற்கான அனைத்து சட்ட பாதுகாப்பும் அதற்கு உள்ளது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற மனு தாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.