எதிர்கட்சிகள் கூட்டணியை மீண்டும் புறக்கணிக்க நிதிஷ் முடிவு : லாலு மகன் பதவி பறிப்பு குறித்து ஆலோசனை
7/10/2025 3:29:15 PM
பாட்னா : ஜனாதிபதி தேர்தலையொட்டி எதிர்கட்சி கூட்டணியில் இருந்து மெல்ல விலகி வரும் நிதிஷ்குமார் மீண்டும் எதிர்கட்சிகளின் கூட்டணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். மேலும் சிபிஐ குற்றச்சாட்டில் சிக்கியுள்ள லாலு மகன் தேஜஸ்வியின் துணை முதல்வர் பதவியை பறிப்பது குறித்தும் நிதிஷ் ஆலோசித்து வருகிறார். பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜவுக்கு எதிராக நிதிஷ், லாலு, ராகுல் ஆகியோர் அமைத்த மெகா கூட்டணி மகத்தான வெற்றியை தேடித் தந்தது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜ கூட்டணியில் நீடித்து வந்த நிதிஷ்குமார் கடந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜ உறவை முறித்துக் கொண்டார். பீகாரில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை பிடித்துள்ள நிதிஷ்குமாருக்கு பழைய பாஜ பாசம் போகவில்லை.
இந்த சூழலில் ஏற்கனவே ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி மத்திய அரசுக்கு நிதிஷ் ஆதரவு தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திட்ட மிடட் போதும், நிதிஷ் மீண்டும் பாஜ பக்கம் சாய்ந்தார். நிதிஷ் தனது முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆனால் நிதிஷ் தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. இந்த சூழலில் தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் கூடி பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும் எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் லாலு உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அரசு சிபிஐயை ஏவி வருவதை கண்டித்தும், அது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வகுக்க வேண்டிய வியூகம் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
ஆனால் இந்த கூட்டத்திலும் நிதிஷ் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என தெரிகிறது. ஏற்கனவே பீகாரில் ஆதரவு திரட்ட மீரா குமார் வந்த போது நிதிஷ் தலைநகர் பாட்னாவில் இருந்து தனது சொந்த கிராமம் ராஜகிர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மீரா குமார் டெல்லி திரும்பிய பிறகே நிதிஷ் பாட்னா திரும்பினார். எனவே நாளை டெல்லியில் எதிர்கட்சிகள் ஆலோசிக்க உள்ளநிலையில் பாட்னாவில் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் நிதிஷ் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜேடியூ தலைவர்கள் மற்றும் அவரது கட்சி எம்பிக்களும் கலந்து கொள்வர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் சிபிஐ குற்றச்சாட்டில் சிக்கியுள்ள லாலு மகன் தேஜஸ்வி துணை முதல்வர் பதவியில் நீடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது. எனவே நிதிஷ்குமாரின் இந்த முடிவானது பீகார் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் தற்போது பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.