கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 5வது நாளாக வேலைநிறுத்தம் : இன்று முதல்வருடன் சந்திப்பு
7/10/2025 3:28:04 PM
கரூர் : ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூர் வீவிங் நிட்டிங் தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தினர், கடந்த ஜூன் 15ம் தேதி வேலைநிறுத்தம் செய்தனர். பின்னர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் விசைத்தறி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உற்பத்தி நடைபெறவில்லை. கரூர் மாவட்டத்தில் 1,000 விசைத்தறிகள், 400 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் 27ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம் செய்ததால் தினமும் ரூ.5 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 6ம் தேதி முதல் வீவிங் நிட்டிங் சங்கம், விசைத்தறியாளர்கள் மீண்டும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று 5வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.
கரூர் வெங்கமேடு, ராயனூர், வேலுசாமிபுரம், வடிவேல்நகர், காமராஜபுரம், செங்குந்தபுரம், ராமச்சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் விசைத்தறி மற்றும் ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த ஸ்டிரைக்கிற்கு கரூர் ஏற்றுமதியாளர் சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம், வீவிங் நிட்டிங் உரிமையாளர் சங்கம் மற்றும் பல்வேறு சங்கத்தை சார்ந்தவர்கள் இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.