கொடைக்கானலில் மாவோயிஸ்ட் நடமாட்டம்? : தோட்டத்தில் பதுக்கிய 54 தோட்டா பறிமுதல்
7/10/2025 3:27:22 PM
கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 ேதாட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை மாவோயிஸ்ட்களால் பதுக்கி வைக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கேரளாவில் இருந்து மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவி இருப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும், தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசார் மற்றும் அதிவிரைவுப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் கீழ்மலை கிராமம் செம்பரான்குளம் அருகே அதிவிரைவுப் படையினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராமகிருஷ்ணனின் தோட்டத்து வீட்டில் அதிரடி சோதனையிட்டனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய ரக 54 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் கொடைக்கானல் எஸ்ஐ முருகானந்தத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவை வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து ஊடுருவிய மாவோயிஸ்ட்டுகள், தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். இதையடுத்து வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.