நிலத்தடி நீரை ராட்சத மோட்டாரில் உறிஞ்சி எடுக்கும் ஓபிஎஸ்சை கண்டித்து கடைகள் அடைப்பு
7/10/2025 3:24:42 PM
பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏற்கனவே குடிநீர் பிரச்னை உள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பினாமி பெயர்களில் 400 ஏக்கர் வரை இப்பகுதியில் நிலங்களை வாங்கி குவித்துள்ளார் என்றும், அந்த நிலங்களில் 200 அடி ஆழ கிணறுகளை தோண்டி, அதில் 200 எச்பி திறனுள்ள மோட்டார்களை பொருத்தி தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மற்ற கிணறுகள் அனைத்துமே வறண்டு விட்டதால், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறி லெட்சுமிபுரம் கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக நேற்று மாலை லெட்சுமிபுரத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபாலன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற கிராம கமிட்டி மற்றும் விவசாய சங்கத் தலைவர் கார்த்தி கூறியதாவது: லெட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பினாமி பெயர்களில் 400 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி, விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலங்களில் 200 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டி, அதிக சக்தி வாய்ந்த மோட்டார்களை பொருத்தி தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் 100 அடி ஆழமே உள்ள கிராம சமுதாய கிணறுகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் ஒரு மின் இணைப்பு பெற்று, அதிலிருந்து அவருக்கு சொந்தமாக கைலாசபட்டியில் உள்ள நிலங்கள் வரை தண்ணீரை கொண்டு செல்கிறார். இதனால் லெட்சுமிபுரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், யாரும் ஊரில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளை கண்டித்து ஒரு மாதத்திற்கும் மேலாக நாங்கள் போராடி வரும் நிலையில், அவருக்கு சொந்தமான நிலத்தில் மேலும் ஒரு கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் கட்சி பாகுபாடின்றி, இன்று கிராம மக்கள் அனைவரும ்கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கிணறு வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், மேலும் அவரது நிலங்களில் வெட்டப்பட்டுள்ள கிணறுகளை ஊராட்சி நிர்வாகத்துக்கு எழுதித் தர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எங்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (இன்று) லெட்சுமிபுரத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும். இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. கிராம மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் நாளை காலை அவர்களுக்கு சொந்தமான கிணற்றை முற்றுகையிட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இன்று காலை லெட்சுமிபுரம் கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முற்றுகை போராட்டத்திற்கு கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் திரண்டு வருகின்றனர். இதனால் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.