3 நிறுவனங்கள் தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது
7/10/2025 3:23:33 PM
சென்னை : தனியார் பால் நிறுவனங்கள் குறித்து ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காரப்பாக்கத்தில் உள்ள ஹட்சன் அக்ரோ பிராடக்ட், ஐதரபாத்தை சேர்ந்த டோட்லா டெய்ரி, திருச்சியை சேர்ந்த விஜய் டெய்ரி ஆகிய நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவில் கூறியிருப்பதாவது: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள்மீது ஆதாரம் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் உள்ளதாகவும், வேதி பொருட்கள் கலக்கப்படுவதாகவும் உள்நோக்கத்தோடு தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகுளை கூறி வருகிறார். இது மக்கள் மத்தியில் எங்கள் பால் மற்றும் பால் பொருட்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் நிறுவனங்களின் பாலை எந்த ஆய்வகத்திலும் சோதனை செய்யாமல் தன்னிச்சையாக தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
எங்கள் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களில் எந்த கலப்படமும் இல்லை என்பது அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வு மையங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் ராஜந்திர பாலாஜி எங்கள் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற தடை விதிக்க வேண்டும். எங்கள் நிறுவனங்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பொதுமக்களுக்கு எங்கள் நிறுவன பொருட்கள் மீதுள்ள நம்பிக்கையை குலைத்துவிட்டார்.
எனவே அவர் எங்கள் நிறுவன தயாரிப்பு பொருட்கள் குறித்து பேட்டியளிக்க கூடாது, ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்’’என்று வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பு வக்கீலை பார்த்து, ‘மனு தாரர்களின் நிறுவனங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்பாக ஆதாரமில்லாமல் ராஜேந்திர பாலாஜி பேசக்கூடாது’ என்று வாய்மொழியாக உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வாரங்களுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.