ஆவடி நகராட்சியில் கால்வாய்களில் குவியும் குப்பைகளால் துர்நாற்றம் : சமூகநலக்கூடத்தில் முடங்கிய சுகாதார மையம்
7/10/2025 3:19:51 PM
ஆவடி நகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், கோவில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட 48 வார்டு பகுதிகளில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் சாலையோரமாக சுமார் 190 கிமீ தூரத்துக்கு திறந்தவெளி மழைநீர் கால்வாய் செல்கிறது. மேற்கண்ட திறந்தவெளி கால்வாய்களில் பல ஆண்டுகளாக வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை விட்டு வருகின்றனர். இங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு குப்பைக் கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் அது கழிவுநீர் கால்வாயாக உருமாறிவிட்டது. இக்கால்வாயை நகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் இந்த திறந்தவெளி கால்வாய்களில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், அதில் நிறையும் கழிவுநீர், சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், இப்பகுதிகளில் சிறுமழை பெய்தால்கூட, கால்வாய் அடைப்பினால் சிறிதளவு மழைநீரும் கழிவுநீரும் சாலைகளில் ஆறாக பெருகி, கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.
மேற்கண்ட பகுதிகளில் திறந்தவெளி கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களை எந்நேரமும் கொசுக்கள் கடித்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு விஷ காய்ச்சல்களும் தொற்றுநோய்களும் பரவி வருகின்றன. இதனால் அங்கு பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள் எந்நேரமும் நோய் தாக்கும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து ஆவடி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல் ஆவடி நகராட்சியில் ஆவடி, பருத்திப்பட்டு, விளிஞ்யம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் சுமார் 140 டன் குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அள்ளி வருகின்றனர். இக்குப்பைகளை சேக்காட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவடி நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் முறையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை. அங்குள்ள குப்பைத் தொட்டிகளும் நிரம்பியுள்ளதால், இங்கு பன்றி தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதுதவிர, ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில், குளக்கரை தெருவில் காற்று வசதி இல்லாத குறுகலான அறையில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மையத்தை 7 முதல் 14வது வார்டு வரையுள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த ஓராண்டுக்கு முன் ஆரம்ப சுகாதார மையத்தின் முதல் தளம் கட்டும் பணி துவங்கியது. கீழ்தளத்தில் சுகாதார மையம் தங்கு தடையின்றி இயங்கியது. பின்னர் முதல் தளப் பணிகள் முடிவடைந்ததும், கீழ்தளத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கியதும், அங்குள்ள சமுதாய நலக்கூடத்துக்கு மாற்றப்பட்டது.
எனினும்ஏற்கெனவே உள்ள ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ்த்தளத்தை சீரமைக்கும் பணிகள் முடங்கியுள்ளது. இரு மாதங்களாக சுகாதார ஊழியர்கள் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் நெருக்கடி மிகுந்த சமுதாய நலக்கூடத்திலேயே ஆரம்ப சுகாதார மையம் தொடர்ந்து இயங்க வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது.
‘ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், இடிந்த நிலையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு அடிப்படை, அத்தியாவசிய திட்டப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் குடியிருப்போரை பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஆனால், மக்களிடம் வசூலிக்க வேண்டிய அனைத்து வரிகளையும் கறாராக வசூலித்து வருகின்றனர்’ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். ஆவடி நகராட்சி நிர்வாகம் இனியாவது சீரான வேகத்தில் இயங்குமா? அல்லது, இதே மெத்தனப் போக்கு தொடர்கதையாக நீளுமா?