ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்
7/8/2025 3:31:02 PM
புதுடெல்லி : காஷ்மீரில் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையது காலமான பிறகு அனந்தநாக் தொகுதி எம்பியாக இருந்த அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் அனந்த்நாக் மற்றும் நகர் தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. நகர் தொகுதியில் போட்டியிட்ட எதிர்கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த அனந்தநாக் தொகுதி இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மே 25ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் காஷ்மீரில் நிலைமை சீரடையாமல் போகவே மீண்டும் அனந்தநாக் இடை தேர்தலை கடந்த மே 2ம் தேதி ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த சூழலில் அனந்தநாக் இடைதேர்தல் மேலும் காலதாமதமாகலாம் என தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி கூறுகையில், அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பாதுகாப்பு நிலவரங்கள் இன்னும் சீராகவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் தற்போது அமர்நாத் யாத்திரை, சுற்றுலா சீசன், திருவிழாக்கள், பண்டிகைகள் காலமாகும். எனவே இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக கூடுதல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தேர்தலை நடத்தினால் மேலும் படையினர் தேவைப்படும். எனவே தேர்தலை அக்டோபரில் நடத்தலாமா என தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது என்றார். அதே போல் தமிழகத்தில் ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலும் கடந்த ஏப்ரலில் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே. நகர் தொகுதி இடை தேர்தலை நீண்ட காலத்திற்கு தாமதபடுத்த முடியாது. எனவே விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது என்றார்.