ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்
7/7/2025 2:57:01 PM
புதுடெல்லி: ஜிஎஸ்டின்னா என்ன என்பது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் மக்களில் பாதிப்பேருக்கு மேல் அது பற்றி தெரியாது என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே விதிப்பு முறையான ஜிஎஸ்டி கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டியின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து வர்த்தகர்களுக்கும் முழுமையான புரிதல் இல்லை. மக்களுக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஜிஎஸ்டி எவ்வளவு என்று தெரியாமலேயே பொருட்களின் விலையை கிடுகிடுவென வியாபாரிகள் உயர்த்தி விட்டனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஜிஎஸ்டி மூலம் விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அது பலத்த ஏமாற்றமாகவே மிஞ்சியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி குறித்து, வே 2 ஆன்லைன் என்ற நிறுவனம் 3.50 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இதில் பெரும்பாலான மக்களுக்கு ஜிஎஸ்டின்னா என்ன வென்றே தெரியவில்லை. இதுகுறித்து நடத்தப்பட்ட சர்வேயில் மொத்தத்தில் 45 சதவீதம் பேருக்கு ஜிஎஸ்டியை பற்றி ஓரளவு தெரிந்துள்ளது. 55 சதவீதம் பேருக்கு ஜிஎஸ்டி பற்றி எதுவும் தெரியாது. அதே போல் தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் ஜிஎஸ்டி பற்றி புரிதல் ஓரளவுக்கு கூடுதலாக உள்ளது. இந்த மாநிலங்களில் 64 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் பலன் ஏற்படும் என்றும். 58 சதவீதம் பேர் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் பிற மாநிலங்களில் அதுவும் கிடையாது. தமிழகத்தைப் பொறுத்தவில் நிலைமை இன்னும் மோசம். இங்கு பெரும்பாலான மக்களுக்கு ஜிஎஸ்டின்னா என்ன வென்றே தெரியாது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.