மதுக்கடைகள் முன்பு முற்றுகை, மறியல் டாஸ்மாக்குக்கு எதிராக வீறுகொண்ட மக்கள்
7/3/2025 3:13:08 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி அன்னசத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுப்பது, ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கடை இதுவரை மூடப்படவில்லை. இந்நிலையில், நேற்று கடையை அகற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சலோமி தலைமை வகித்தார். டிஎஸ்பி ஆறுமுகம், தாசில்தார் சரவணன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாககடையை அகற்றாவிட்டால், கடையை அடித்து நொறுக்குவோம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் திருமயம் அருகே கடியாபட்டி கடைவீதியில் டாஸ்மாக் கடை மூடக்கோரி 200 பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மறியலிலும் இறங்கினர்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பனையூர் ஊராட்சி கீழபள்ளிச்சந்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 30ம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இதை அகற்றக்கோரி கீழபள்ளிச்சந்தம் கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் முதல் கடை முன்பு உள்ள சாலையில் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். விடிய, விடிய இந்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. போராட்டம் நடக்கும் இடத்திலேயே கிராம மக்கள் சமையல் செய்து சாப்பிட்டு, போராட்டத்தில் பங்கேற்றனர். இன்று 3ம் நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் கடை திறக்கப்படவில்லை. அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட கரடிகுளம் அடுத்த பாப்பாங்குளம் கிராமத்தில் தனியார் வயலில் டாஸ்மாக் கடைக்காக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக தகவல் கிடைத்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.