நெடுவாசலில் கிராம மக்கள் 79வது நாளாக போராட்டம்
6/29/2017 3:43:18 PM
ஆலங்குடி : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராமமக்கள், விவசாயிகள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று நடந்த போராட்டத்தில் அரசமரத்தடி பிள்ளையாரிடம் மக்கள் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணாததால் கடவுளிடம் மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அரசுகள் தங்களை கைவிட்டாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பிள்ளையாரிடம் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு கொடுத்தனர்.
விவசாயிகள் கூறுகையில், மாடு, கல், குப்பைத்தொட்டி மற்றும் வேற்று கிரகவாசியிடம் மனு கொடுப்பது போன்ற பல்வேறு வகை போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் எங்களை ஏமாற்றிய நிலையில் பிள்ளையாரிடம் மனு கொடுக்க வேண்டியதாயிற்று என்றனர். இன்று 79வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘திட்டம் ரத்தாகும் வரை அசர மாட்டோம். தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், பெண்கள் தெரிவித்தனர்.