மதுக்கடைகள் முற்றுகை தொடர்கிறது தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு மதுவால் தாலியை பறிப்பதா?
6/28/2017 3:59:15 PM
அரியலூர் : காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது. நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
தஞ்சை: திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார்கோவில் அடுத்த வேலங்குடியில் புதிதாக நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வண்டுவாஞ்சேரி மற்றும் வேலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் திருவாரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சமூக நலத்துறை தாசில்தார் சுதா, நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் கவுரி உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடையில் இருந்த மதுபாட்டில்களை லோடு ஆட்டோவில் ஏற்றி அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
அரியலூர்: குவாகம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாலிக்கு தங்கம் கொடுக்கும் தமிழக அரசே தாலியை பறிக்கும் வகையில் கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடையை திறந்து வருவதாக குற்றம் சாட்டினர். பின்னர் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் (பொ) தனசேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஜெயங்கொண்டம் அடுத்த மருக்காளங்குறிச்சி, மங்களம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. தகவலறிந்த மருக்காளங்குறிச்சி, மங்களம் கிராம பொதுமக்கள் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ள கௌத்தூர் கைகாட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை ஏடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனாலும் போலீசாரின் உறுதியை நம்ப முடியாது என்று கூறி புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை மூடி மதுபானங்களை எடுத்து செனறனர். புதுக்கோட்டை: மேலகாயாம்பட்டி, கீழகாயாம்பட்டி, எம்ஜிஆர்நகர், கணேசபுரம், ராயப்பட்டி கிராமத்தினர் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், மாஞ்சன்விடுதி விளக்கு அருகில் அரசு மதுபான கடை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கு சிலர் மதுகுடித்துவிட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காயாம்பட்டி பொதுமக்கள் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் அந்த மதுக்கடையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எங்கள் கிராமத்தினர் சிலரின் மீது வழக்கு பதிவு செய்ய போகிறோம் என்று போலீசார் நெருக்கடி கொடுக்கின்றனர். இந்நிலை இனி தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.