என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்
6/28/2017 3:57:45 PM
திருவனந்தபுரம் : என்னை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று நடிகை பாவனா கூறியுள்ளார். நடிகை பாவனா கடத்தல் விவகாரம் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பிரபல நடிகர் திலீப் கூறி வந்தாலும், தற்போது நடக்கிற சம்பவங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகவே சென்று கொண்டிருக்கின்றன. அவர் அளித்த ஒரு பேட்டியில், பாவனாவுக்கும், பல்சர் சுனிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவரும் கோவாவில் ஒரு மாதம் ஒன்றாக இருந்தனர். இந்த பழக்கம் தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் நடிகை பாவனா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரியில் எனக்கு எதிராக நடந்த மோசமான சம்பவத்திற்கு பின்னர் நான் இதுவரை உங்களிடம் (பத்திரிகை) எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகள் எதையும் வெளிப்படையாக கூற வேண்டாம் என்று என்னிடம் கூறியதால் தான், நான் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன்.
இப்போது பத்திரிகைகளில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் நான் சமரசம் செய்து கொண்டதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அது உண்மை அல்ல என்று இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். என் வாழ்க்கையை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி பலரது பெயர்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள் மூலம் தான், நான் அந்த பெயர்களை தெரிந்து கொண்டுள்ளேன். யாரையாவது தண்டிக்க வேண்டும் என்றோ, காப்பாற்ற வேண்டும் என்றோ விசாரணை அதிகாரிகளிடம் நான் எதையும் கூற வில்லை. இந்த வழக்கில் நான் யாருடைய பெயரையும் தெரிவிக்கவில்லை. தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சிலரது பெயர்கள் கூறப்படுகின்றன. ஆனால் அவர்கள் தான் குற்றவாளிகள் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. அதேபோல் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதற்கான ஆதரங்களும் என்னிடம் இல்லை.
பல்சர் சுனிலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று ஒரு நடிகர் கூறியது மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. எனக்கு எதிராக. இதுபோன்ற உண்மை இல்லாத தகவல்களை கூறினால் நான் சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன். இவ்வாறு பாவனா கூறினார். நடிகர் திலீப் மன்னிப்பு இது தொடர்பாக திலீப் கூறியதாவது: நடிகை பாவனா குறித்து தான் கூறிய கருத்துக்கள், அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில தீய சக்திகளின் கொடுமைக்கு ஆளான நடிகையை வேண்டுமென்று அவமானம் செய்யும் நோக்கில் நான் எதையும் கூறவில்லை. அந்த நடிகை அனுபவித்த வேதனைகளில் மனதால் நான் அவருடன் ஒன்றாக இருக்கிறேன். நான் கூறியது அவரை வேதனைப்படுத்தி இருந்தால் வாபஸ் பெற்று கொள்கிறேன் என்றார்.