முதல்வர் தொடங்கி வைத்தார் மணல் விற்பனைக்கு இணையதளம்
6/28/2017 3:54:54 PM
சென்னை : தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான மணல் எளிதில் கிடைத்திட தமிழ்நாடு மணல் இணைய சேவை, செல்போன் செல்போன் செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் மணல் குறைந்த விலையில் தங்குதடையின்றி கிடைக்க முதல்வர் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையதளம், செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து, பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் குவாரிகள், மணல் விற்பனை நிலையங்களில் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ளலாம்.மணல் பெற்றுக் கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து, பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறையின் வாயிலாக 28.6.2025 முதல் 30.6.2025 வரை பயிற்சியளிக்கப்படும். இதற்கென தனியாக ஓர் உபயோகிப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தலைமைச் செயலாளர் பெற்றுக் கொண்டார். www.tnsand.in என்ற இணையதளத்திலும், tnsand என்ற செல்போன் செயலி மூலம் மட்டும் ஜூலை 1ம் தேதி முதல் முன் பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.