ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு 25 லட்சம் விசைத்தறிகள் 2வது நாளாக முடக்கம்
6/28/2017 3:54:13 PM
கரூர் : நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ஜூலை 1 முதல் அமலாகிறது. ஜவுளி ரகங்களில், விசைத்தறி, காட்டன் ஜவுளி ரகங்கள், பருத்தி நூலுக்கு 5 சதவீதம், ரெடிமேடு ஆடைகளுக்கு 12 சதவீதம், ரேயான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாடு முழுவதும் விசைத்தறிகள் இயங்கவில்லை. கோவை, ஈரோடு, கரூர், சேலம், விருதுநகர் உள்பட தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விசைத்தறிக்கூடங்கள் இயங்கவில்லை. இதனால் 25 லட்சம் விசைத்தறிகள் முடங்கின. நேற்று மட்டும் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி பாதித்தது. இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. கரூர் மாவட்டத்தில் விசைத்தறிக்கூடங்கள், ஜவுளி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நூலை வாங்கி விசைத்தறிக்கு கொடுக்கும் பணியும் நடக்கவில்லை. விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டதால் அங்கும் உற்பத்தி நடைபெறவில்லை.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஜவுளி தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. கைத்தறிக்கு விலக்கு அளித்ததைப்போன்று விசைத்தறிக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும். இந்த 3 நாள் கடையடைப்புக்கு பின்னரும் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் தொடர்ந்து உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றனர். இன்று 2வது நாளாக கரூரில் வெங்கமேடு, ராயனூர், வேலுசாமிபுரம், வடிவேல்நகர் பகுதிகளில் 1000 விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. காமராஜபுரம், செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. நாளையும் ஸ்டிரைக் நீடிக்கிறது. 3 நாள் போராட்டத்தால் ரூ.300 கோடி உற்பத்தி பாதிக்கப்படும்.