காஷ்மீரில் ராம்நாத் கோவிந்த் நாளை ஆதரவு திரட்டுகிறார்
6/27/2017 4:19:17 PM
ஸ்ரீநகர் : பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் காஷ்மீரில் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுகிறார். ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை 17ல் நடக்கிறது. ஆளும் பாஜ சார்பில் பீகார் கவர்னர் ராம் நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் கடந்த 23ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாஜ எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியினர், மாநில கட்சியினரிடம் ராம் நாத் கோவிந்த் ஆதரவு கேட்டு பயணம் செய்து வருகிறார். முதல் கட்டமாக அவர் உத்தரபிரதேசம் சென்று முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் பாஜ எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரிடம் ஆதரவு திரட்டினார். அவருடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்றிருந்தார். கூட்டணி கட்சியினரையும் சந்தித்தார்.
பின்னர் இங்கிருந்து உத்தரகண்ட் சென்ற ராம்நாத் கோவிந்த் அங்கு முதல்வர் திரிவேந்திர சிங் ரவாத்தை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருடன் மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் சென்றிருந்தார். அங்கு டேராடூனில் பாஜ எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதை தொடர்ந்து நாளை ராம் நாத் கோவிந்த் காஷ்மீர் செல்கிறார். காஷ்மீரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி-பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நகரில் அவர் பாஜ எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். காஷ்மீர் செல்லும் ராம் நாத் கோவிந்துடன் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உடன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.