‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்
6/27/2017 4:12:55 PM
செந்துறை : அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளசிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கணவனால் கைவிடப்பட்டவர். இவரது 2 மகன்களும் தந்தையுடன் சென்று விட்டதால் அ்நத பெண் தனது தாய் வீட்டுடன் வந்து கூலி வேலை செய்து வருகிறார். கணவனால் கைவிடப்பட்டவர் என்ற அடிப்படையில் இவருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வந்து கொண்டிருந்தது. அந்த தொகை சிலமாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது. மகன்கள் இருப்பதால் உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. அந்த பெண் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை(விஏஓ) சந்தித்து, மகன்கள் இருவரும் என்னிடம் இல்லை. தந்தையுடன் தான் இருக்கிறார்கள். எனவே எனக்கு உதவித்தொகை பெற தகுதி உண்டு, ஏன் நிறுத்தினீர்கள் என விஏஓவிடம் முறையிட்டு உள்ளார்.
அதற்கு அந்த விஏஓ, தனது ஆசைக்கு இணங்கும்படி அந்த பெண்ணை நிர்ப்பந்தம் செய்து வந்து உள்ளார். அடிக்கடி போன் மூலமும் அந்த பெண்ணிடம் விஏஓ செக்ஸ் டார்ச்சர் கொடுத்து உள்ளார். இதனால் வெறுத்து போன அந்த பெண், விஏஓ செல்போன் பேச்சை டேப் செய்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உள்ளார். ‘அரசாங்கம் உங்களுக்கு தான் சம்பளம் கொடுக்கிறதே, உங்க மகள் போல இருக்கிற என்னிடம் இப்படி பேசலாமா?’ என அந்த பெண் கேட்கிறார். அதற்கு விஏஓ, ‘அரசாங்கம் சம்பளம் கொடுக்குது, நீ எனக்கு என்ன கொடுக்க போற’ என்று பேச்சை தொடங்குகிறார். அதற்கு அந்த பெண் ‘இதற்கெல்லாம் வேறு ஆளைப்பார். எனக்கு பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை’ என காட்டமாக பேசுகிறார். செந்துறை பகுதியில் இப்போது அனைவரது வாட்ஸாப்களிலும் இந்த ஆடியோ தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர், தாசில்தார், மற்றும் போலீசாரிடம் புகார் செய்யப்போவதாகவும் அந்த பெண் தெரிவித்து உள்ளார்.