டாஸ்மாக்கையும் திறந்து வைத்துவிட்டு குடித்துவிட்டு வந்தால் கேஸ் போடுவதா? : ‘குடி’மகன்கள் மறியல்
6/27/2017 4:11:51 PM
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுவாச்சூர். இங்குள்ள அயிலூர் சாலையில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதை அகற்றாத மாவட்ட நிர்வாகமோ அப்பகுதி ஆட்டுச்சந்தை கிழக்கே மற்றொரு கடையையும் திறந்துள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி பணியில் ஈடுபட்டிருந்தார். அயிலூர் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மதுஅருந்திவிட்டு சிறுவாச்சூருக்குள் வருவோரை அவர் வழிமறித்து வாைய ஊதச்சொல்லி வழக்கு பதிவுசெய்து அபராதம் வசூலித்து வந்துள்ளார்.
ஆத்திரமுற்ற ‘குடி’மகன்கள், ‘இங்கு கடையே வைக்கவேண்டாமென்று கூறுகிறோம். கடையை வைத்துவிட்டு, குடித்துவிட்டு வருவோரிடம் எதற்காக வழிமறித்து கேஸ்போடுகிறீர்கள். ஊருக்குள்தானே செல்கிறோம். எங்களை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக்கூறி தகராறு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டருக்கும் குடிமகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குடிமகன்கள் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய ெநடுஞ்சாலையில் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.