நெடுவாசலில் 77வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
6/27/2017 4:08:48 PM
ஆலங்குடி : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். தினமும் பல்வேறு வகை நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் அப்பகுதி பெண்கள் மற்றும் விவசாயிகள், இத்திட்டம் செயல்படுத்தபட்டால் வெளியேறும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட அபாயகரமான வாயுக்களை தெர்மாகோல் கொண்டு மூடுவது போல் சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கைகளில் பதாகைகளை ஏந்தி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இன்று 77வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது. தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் மக்கள் திரளாக பங்கேற்றுவருகின்றனர்.