செத்தாலும் தண்ணீர் இல்லை நீரை விலைக்கு வாங்கி நீத்தார் கடன்: சங்கரன்கோவிலில் அவலம்
6/23/2017 3:31:07 PM
நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இடுகாட்டில் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி இறுதிக்கடன் சம்பிரதாயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வாழும்போதுதான் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், செத்த பிறகு மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யும்போது கூட தண்ணீர் இன்றி அவதிப்படும் அவலம் உள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இதன் அருகே தெப்பக்குளம், குடிநீர் தொட்டி எல்லாம் இருக்கிறது. ஆனால் தண்ணீர்தான் இல்லை. இங்கு இறுதிச் சடங்கு செய்ய வருபவர்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து நெடுங்குளம் செல்லும் வழியில் இந்த மயானம் உள்ளது. அப்பகுதியிலேயே இது பெரிய மயானம் என்பதால் அக்காலத்திலேயே அருகில் தெப்பக்குளம் ஒன்றை அமைத்திருக்கின்றனர். பின்னர் உள்ளாட்சி சார்பில் மேல் மட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றும் அமைத்துள்ளனர். நீண்ட காலமாக தெப்பக்குளம் தூர்ந்து கிடக்கின்றது. அதை குப்பை கிடங்காக பயன்படுத்துகின்றனர்.
மேல்மட்ட நீர்த்தேக்கத்தொட்டி வறண்டு வெடித்துள்ளது, அதன் கீழ் நீரேற்று இயந்திரமுள்ள அறை பூட்டியே கிடக்கிறது. பூட்டு துருப்பிடித்துள்ளது. இறுதிச் சடங்கு செய்ய வருபவர்கள், நீர்க்குடம் எடுக்கவும், வாரிசுகள் நீர்ப்பந்தல் பிடிக்கவும், தலை நீராட்டவும் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் குளிக்கவும் முடியவில்லை. எனவே, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தினரும் இறுதி காரியங்களுக்காக ஒரு டிராக்டர் குடிநீராவது விலைக்கு வாங்கவேண்டியுள்ளது. இதற்காக தண்ணீர், டிராக்டர் வாடகை என ரூ.1000 வரை செலவாகிறது. அருகில் ஒரு போர் உள்ளது. அதை சிறிது ஆழப்படுத்தினால் நிச்சயம் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை என மக்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.