ரம்ஜான் பண்டிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தை களைகட்டியது: ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
6/23/2017 3:28:35 PM
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. செஞ்சியை சுற்றியுள்ள 120 கிராமங்களிலும் விவசாயமே முக்கிய தொழிலாக விளங்குகிறது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் ஆடு வளர்ப்பையும் கூடுதலாக செய்து வருகின்றனர். மலைப்பகுதி மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ளதால் ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்கள் கிடைக்கிறது. செஞ்சி சந்தைமேடு பகுதியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தையில் இப்பகுதி விவசாயிகள் தங்களின் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் வருகிற 26ம்தேதி (திங்கள்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் வெள்ளிக்கிழமையான இன்று நடைபெற்ற வாரச்சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதிகாலை 4 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் வளர்த்த ஆடுகளை கொண்டு வந்தனர். மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்றிரவே வந்து விட்டனர்.
இன்று காலை 4 மணிக்கு வாரச்சந்தை தொடங்கியதும் அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலைஆடு உள்ளிட்ட 10 வகையான ஆடுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. ஒரு செம்மறி ஆடு (சுமார் 15 கிலோ எடையுள்ளது) கடந்த வாரம் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடு ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. இன்றைய வாரச்சந்தையில் ரூ. 6 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் மகிழ்ச்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். நாட்டுக்கோழிகளும் இன்றைய சந்தையில் விற்கப்பட்டன. இது தவிர இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனையானது. வாரச்சந்தை களைகட்டியதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.