விவசாயிகளுக்கான பயிர்காப்பீட்டு தொகை 888 கோடி ரூபாய் வழங்க காப்பீட்டுக்கழகம் ஒப்புதல்: தமிழக அரசு அறிவிப்பு
6/23/2017 3:26:54 PM
சென்னை: சம்பா நெல் சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, இந்திய வேளாண் காப்பீட்டுக்கழகம் இரண்டாம் கட்டமாக ரூ.888 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, சம்பா நெல் சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 21.6.2025 அன்று இந்திய வேளாண் காப்பீட்டுக்கழகம் இரண்டாம் கட்டமாக மேலும் ரூ.888 கோடியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்தொகை 10 மாவட்டங்களிலுள்ள சம்பா நெல் சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.489 கோடியும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.355 கோடியும், திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.20 கோடியும், அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ரூ.24 கோடியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அடுத்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும் என இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் முயற்சியால், சென்ற ஆண்டு சம்பா பருவத்தில் 16 மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்து பாதிப்படைந்த 2,92,096 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.928.12 கோடி காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இதுவரை பெறப்பட்டுள்ளது. நெற்பயிருக்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையையும், இதர பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.