போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை
6/20/2017 3:25:06 PM
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கீழமாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(எ)மூர்த்தி(45). லாரி உரிமையாளர். இவரது மனைவி கவிதா(40). கவிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கவிதா கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே இருந்தார். ஆறுமுகம் வெளி நாட்டிற்கு சென்று மீண்டும் சொந்த ஊர் வந்தார். இருவரும் விவாகரத்து பெற்று கொள்வதற்காக நீதிமன்றத்தை அணுகினார்கள். தகவலறிந்த இருதரப்பு உறவினர்களும், இருவரையும் சமாதானம் செய்து வைத்து கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு கீழமாத்தூரிலிருந்து தாராசுரம் பகுதியில் குடியமர்த்தினர்.
கடந்த இருதினங்களாக இருவருக்கும் குழந்தை இல்லாதது குறித்து தகராறு ஏற்பட்டதால், கவிதா தனது தம்பி ராஜாவை அழைத்துள்ளார். நேற்று வீட்டிற்கு ராஜா வந்ததும், ஆறுமுகம் தகராறு செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். கவிதாவையும் அடித்துள்ளார். பலத்த காயமடைந்த ராஜா கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று, ‘என் அக்காவை கணவர் கொடூரமாக தாக்குகிறார், காப்பாற்றுங்கள்’ என்று கூறினார். அங்கு இருந்த போலீசார் ‘நீ போ, நாங்கள் வருகிறோம்’ என கூறிவிட்டு 20 நிமிடம் கழித்து வந்தனர். போலீசார் வீட்டிற்குள் வருவதற்குள், வீட்டின் கதவினை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு கவிதாவை, ஆறுமுகம் சரமாரியாக தொண்டை மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டினார்.
கவிதாவின் அலறல் சத்தம் கேட்ட போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அதற்குள் கவிதா இறந்து விட்டார். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். ‘ஆபத்தான நிலையில் ஒருவர் வந்து தகவல் தெரிவித்த நிலையிலும் போலீசார் உடனடியாக செல்லாதது ஏன்? விரைந்து சென்று இருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாமே, இதுபோன்ற அலட்சியம் போலீசாரிடம் இருக்க கூடாது’ என தஞ்சை எஸ்.பி. மகேஷ், குடந்தை தாலுகா போலீசாரை கண்டித்தார்.