நெடுவாசலில் 66வது நாளாக போராட்டம்
6/16/2017 5:21:53 PM
ஆலங்குடி:ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 65வது நாளான நேற்று நடந்த போராட்டத்தில் கிராம பெண்கள், விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் காலி குடங்களை தலையில் கவிழ்த்துக் கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கைகளில் பதாகைகள் ஏந்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இன்று 66வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி 2ம் கட்டமாக தொடர்ந்து 65 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மாசு அடைந்துவிடும். அவ்வாறு மாசு அடைந்த தண்ணீரை நாங்கள் பயன்படுத்துவதால் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு அழிந்து விடுவோம். எனவே, மத்திய மாநில அரசுகள் எங்களையும், எங்களுடைய வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய விவசாயத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்