புழல் சிறைக்கு மாற்றக்கோரி நளினி திடீர் உண்ணாவிரதம்
6/16/2017 5:21:06 PM
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நளினி சிறைதுறைக்கு மனு அளித்துள்ளார், அதில், தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். உறவினர்கள், வழக்கறிஞர்கள் சென்னையில் உள்ளனர். மேலும் தனது மகளுக்கு திருமண வேலைகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே சிறைத்துறை நிர்வாகம் தன்னை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.மனுவை பெற்றுக்கொண்ட சிறைத்துறை நிர்வாகம் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லையாம். இதையடுத்து நேற்று சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவரது கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லையாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நளினி நேற்று இரவு உணவை சாப்பிடாமல் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை புழல் சிறைக்கு மாற்றும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் பேச்சுவார்தையும் தோல்வி அடைந்துள்ளது. இன்று காலையும் உணவு சாப்பிடாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் சிறையில் உள்ள நளினி தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது கோரிக்கையை தமிழக சிறைத்துறை நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றனர்.