டெல்லியில் ரூ.25 கோடி போதை பொருள் பறிமுதல் : வெளிநாட்டினர் 3 பேர் கைது
6/15/2017 3:51:08 PM
புதுடெல்லி: டெல்லியில் ரூ.25 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை நார்காடிக்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த பெண் உள்பட 3 வெளிநாட்டினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் இருந்து கோகைன் எனப்படும் போதைப்பொருள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவான நார்காடிக்ஸ் பீரோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து டெல்லிக்கு சுற்றுலா விசாவில் பொலிவியா வழியாக வரும் நாட்டினரை போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர்.
கடந்த 12ம் தேதி எத்தியோப்பியாவை சேர்ந்த மரியா என்ற பெண் சுற்றுலா விசாவில் பொலிவியா மற்றும் பிரேசில் வழியாக டெல்லி வந்தார். அவரை நார்காடிக்ஸ் போலீசார் ரகசியமாக பின்தொடர்ந்தனர். பகர்கன்ச் பகுதியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று அவரது அறைக்கு நைஜீரியாவை சேர்ந்த இரண்டு ஆப்ரிக்கர்கள் வந்தனர். அவர்களிடம் 7.5 கிலோ எடையுள்ள கோகைன் போதை பொருளை மரியா கொடுத்தார். அப்போது ஓட்டல் அறையில் அதிரடியாக புகுந்த இந்திய அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.
கோகைன் போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ. 25 கோடியாகும். எத்தியோப்பியாவை சேர்ந்த மரியாவுக்கு போதை பொருளை கடத்த ரூ. 2 லட்சம் கொடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. பொலியாவில் வைத்து போதை பொருள் மரியாவிடம் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்த இருவரும் போலி பாஸ்போர்ட் மற்றும் விசாவில் இந்தியாவில் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரிடமும் விசாரணை நடை பெற்று வருகிறது.