பரபரப்பான சூழலில் பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 12ம் தேதி தொடங்க முடிவு: புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்
6/14/2017 3:57:14 PM
புதுடெல்லி: மாடு விற்பனைக்கு தடை, விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு ஆகியவற்றால் அரசியல் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் 12ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்கட்சிகள் புயலை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரு கட்டமாக நடந்த இந்த தொடர் கடந்த ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்தத் தொடரில் நிதி மசோதா, ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கோவாவில் பாஜ ஆட்சியை கைப்பற்றியது உட்பட பல விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடத்த, அமைச்சரவை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மழைக்கால கூட்டத் தொடர் தேதி குறித்து ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் வரும் 20ம் தேதி இறுதி முடிவு எடுக்கும். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, மழைக்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தால், அனைத்து எம்.பி.க்களும் டெல்லியில் இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்த தொடரில், மாடு விற்பனைக்கு தடை, விவசாயிகள் மீதான துப்பாக்கி சூடு உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது.