டெல்லி பல்கலையில் தமிழ் விருப்ப பாடமாக சேர்ப்பு
6/14/2017 3:52:13 PM
புதுடெல்லி: டெல்லி பல்கலை கழகத்தில் ஊடகவியல் துறை படிப்பில் தமிழை விருப்ப பாடமாக சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு பல்கலை கழகங்களிலும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக டெல்லி பல்கலை கழகத்தில் ஊடகவியல் படிப்புக்கு தமிழை விருப்ப பாடமாக தேர்வு செய்து கொள்ள நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி பல்கலை கழக அனுமதி குழு தலைவர் மகராஜ் பண்டிட் கூறுகையில், தமிழ் மொழியானது, இந்தியாவின் தென் மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக பேசப்படுகிறது. எனவே தமிழ் மொழி படிக்கும் மாணவர்களுக்கு இந்த நாடுகளுக்கு செல்லும் போது அது பயன் உடையதாக அமையும். எனவே ஊடகவியல் துறையில் விருப்ப மொழியாக தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர மற்றொரு இந்திய மொழியான வங்காளியும் விருப்ப பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.இனிமையான தமிழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாய் டெல்லி பல்கலையின் இந்த அறிவிப்பு கிடைத்துள்ளது.