காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு வீட்டுக்காவல்
6/14/2017 3:50:12 PM
காஷ்மீர்,; காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் மெளலவி ஒமர் பரூக், தேசியப் பாதுகாப்பு படையினரால் நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.இந்தியா சுதந்திரமடைந்தது முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் சேர்க்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர்களுக்கு பாகிஸ்தான் அரசு ஆயுத உதவி மற்றும் பண உதவிகளைச் செய்து வருவதாக இந்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து செல்ல பிரிவினைவாதிகள் ஆயுதம் தாங்கி போராடி வருகிறார்கள். இவர்களுக்கு சில தீவிரவாத அமைப்புகள் உதவி செய்து வருகின்றன.
காஷ்மீரை சேர்ந்த முக்கிய அமைப்பான ஹுரியத் மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிலானியை கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புப் படையினர் வீட்டுக்காவலில் வைத்தனர். தொடர்ந்து அவர் ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் மெளலவி ஒமர் பரூக் நேற்று ஜம்முவில் உள்ள மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு நகர்ப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் பதட்டமாக காணப்படுகிறது.