பேய் பிடித்ததாக கூறி சாணத்தை தின்ன வைத்து கல்லூரி மாணவி சித்ரவதை: மகாராஷ்டிராவில் நடந்த அவலம்
6/14/2017 3:45:52 PM
மும்பை: மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவிக்கு பேய் பிடித்திருப்பதால் அதை விரட்டுவதற்காக சாணத்தை தின்ன வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர் மாவட்டத்தில் சக்கூர் என்ற இடத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கருதி அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சிலர், அந்த பெண்ணை உள்ளூரில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்து சென்றுள்ளனர். அந்த மாணவி எவ்வளவோ மன்றாடியும் தந்தையும் உறவினர்களும் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாராக இல்லை.
இதையடுத்து மந்திரவாதி உள்ளிட்ட 6 பேர் பேய் விரட்டுவதாக கூறி அந்த பெண்ணை அடித்து உதைத்தனர். பின்னர் பேய் விரட்டுவதற்காக சாணத்தை தின்ன வைத்து மந்திரவாதி கொடுமைப்படுத்தியுள்ளான். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணையும் இவ்வாறு அடித்து கொடுமைப்படுத்தி சாணத்தை தின்ன செய்துள்ளனர்.இதையடுத்து இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை, மந்திரவாதி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடகாவுக்கு தப்பி ஓடிய மந்திரவாதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியின் உறவினரான வயதான மூதாட்டி ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.