ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
6/14/2017 3:29:00 PM
புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தங்களுக்கான வேட்பாளர் குறித்து எதிர்கட்சிகள் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர். ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 28-ம் தேதி. வேட்புமனு பரிசீலனை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதி நடைபெறும்.
தேர்தலில் எம்எல்ஏக்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் வாக்களிக்கலாம். கட்சி வேறுபாடு இன்றி இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க சுதந்திரம் உள்ளது. இதை கட்சி கொறடா கட்டுப்படுத்த முடியாது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தற்போது 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்து 120 பேர் எம்.எல்.ஏ.க்கள், 776 பேர் எம்.பி.க்கள். எம்.பி.க்களில் நியமனம் செய்யப்பட்ட லோக்சபா உறுப்பினர்கள் 2 பேர் வாக்களிக்க முடியாது. அதேமாதிரி ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமிக்கப்பட்ட 12 பேர் வாக்களிக்க முடியாது.
வேட்பு மனு தாக்கல் தொடங்குவதையொட்டி நாடாளுமன்ற செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களை பொறுத்த அளவில் அந்தந்த மாநில சட்ட பேரவைகளின் செயலாளர்கள் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவர். தமிழகத்தில் சட்ட பேரவை பொறுப்பு செயலாளர் க.பூபதி, இணை செயலாளர் பி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட விரும்புபவர்கள் இவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட காப்பு தொகை ரூ.15 ஆயிரம் ஆகும். பதிவாகும் ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். 33 வயது நிரம்பிய இந்தியர் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். வேட்பு மனுவை 50 எம்பிக்கள் அல்லது எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். இதை வேறு 50 எம்பிக்கள் அல்லது எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.
எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க சட்ட பேரவை வளாகத்தில் தனி இடம் ஒதுக்கப்படும். வாக்கு சீட்டு முறையில் இவர்கள் வாக்களிப்பர். எம்பிக்களுக்கு பச்சை, எம்எல்ஏக்களுக்கு பிங்க் நிறத்தில் வாக்கு சீட்டுகள் வழங்கப்படும். ஓட்டு போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே உதவ முடியும். வாக்களிக்கும் இடத்தில் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. வாக்கு சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு இருக்கும். அவரது பெயருக்கு எதிரே முதல் ஓட்டு யாருக்கு என்பதை தெரிவிக்கும் வகையில் 1 என எண்ணால் குறிப்பிட வேண்டும். டிக் அடிக்க கூடாது. இரண்டாவது ஓட்டு அளிக்க விரும்பினால் வேட்பாளர் பெயர் அருகே 2 என எண்ணால் எழுத வேண்டும். உதவி தேர்தல் அதிகாரி கொடுக்கும் பேனாவையே பயன்படுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 28ம் தேதி கடைசி நாளாகும். பாஜ சார்பில் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து ஜெட்லி, ராஜ்நாத், வெங்கய்யா நாயுடு கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. எதிர்கட்சிகள் தங்களது வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று மாலை 4 மணிக்கு கூடுகின்றனர். சோனியா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், ஜேடியூ உள்ளிட்ட 17 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையடுத்து ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.