திருப்பதி கோயிலுக்கும் `ஜிஎஸ்டி’: லட்டு விலை உயர்கிறது
6/14/2017 3:28:49 PM
திருமலை: மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி வசூல் செய்யும் வகையில் ஜிஎஸ்டி மசோதாவை கொண்டு வந்து, வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த ஜிஎஸ்டி வரி மசோதாவில் ஆண்டுக்கு 20 லட்சம் வருவாய் கிடைக்கும் கோயில்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோயிலில் பிரசாதம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி மூலப்பொருட்களின் மீது 12 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறைகளுக்கான வாடகையிலும் ₹500க்கு மேல் கட்டணம் உள்ள அறைகளுக்கு சொகுசு வரி செலுத்த வேண்டி வரும். இதுமட்டுமின்றி தலைமுடி ஏலத்திற்கும் வரி செலுத்தப்படுவதால், அதற்கான வரியை பக்தர்களிடம் வசூல் செய்வதா? அல்லது தேவஸ்தானமே ஏற்பதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பில் மாநில அரசின் மூலம் கேட்டு கொள்ளப்பட்டது.ஆனால் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்த கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரி விதிப்பில் விலக்கு அளித்தால் மற்ற மாநிலங்களும் அதே போன்று வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பதால் வரி ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார்.மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால் திருப்பதி ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள், அறைகள் வாடகை உள்ளிட்டவை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.