கணவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் 18 பவுன் பறிப்பு : மூதாட்டியை தாக்கி 5 பவுன் திருட்டு
6/14/2017 3:09:31 PM
தண்டையார்பேட்டை: சென்னை பூங்கா நகர் அப்பு செட்டி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (32). இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர்கள், நேற்றிரவு பாரிமுனையில் பொருட்கள் வாங்கிவிட்டு, வால்டாக்ஸ் சாலை ராசப்ப செட்டி தெரு வழியாக பைக்கில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது 2 மர்ம ஆசாமிகள், பைக்கில் பின்தொடர்ந்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், திடீரென சதீஷ் பைக் மீது மர்ம ஆசாமிகள் மோதியதால் சதீஷ், பைக்கை நிறுத்தினார்.அப்போது 2 மர்ம ஆசாமிகளும் ராஜேஸ்வரி அணிந்திருந்த 18 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து பைக் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: சென்னை ஏழுகிணறு சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (67). இவரது மனைவி ஜெயலட்சுமி (64). இவர், நேற்றிரவு தங்கசாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார்.வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலியை பறிக்க முற்பட்டனர். செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டதால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், ஜெயலட்சுமியை தள்ளிவிட்டனர். இதில் தலையில் பலத்த அடிபட்டு மயக்கம் அடைந்தார். இதை பயன்படுத்தி செயினை பறித்து கொண்டு மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வந்து ஜெயலட்சுமியை மீட்டு வண்ணாரப்பேட்டை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.