திருநின்றவூர் பெரிய ஏரியை தூர்வாரகோரி பகுஜன் சமாஜ் விரைவில் போராட்டம்
6/13/2017 5:21:11 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லியிடம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் இரா.அன்புச்செழியன் தலைமையில் அப்பகுதி மக்கள் கொடுத்த மனுவின் விவரம்: திருநின்றவூர் பெரிய ஏரி தூர்வாரி 70 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தூர்வாரி கரை அமைக்கவும், கலங்கள் மற்றும் நரிமதகு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு செய்த 2467 மனையில் உள்ள வீடுகளில் ஏரியின் உபரி நீர் புகாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்தில் கூறியபடி ரூ.60 லட்சத்தில் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கரை அமைக்கப்படும் என ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டும் இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை. மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் இரா.அன்புச்செழியன் தலைமையில் ஏரியை தூர்வாரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.