காஷ்மீரில் பரபரப்பு பாக். ராணுவம், தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்: இந்திய வீரர்கள் 3 பேர் காயம்
6/13/2017 5:06:58 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரின் நவுஷேரா மாவட்டத்தில் கிருஷ்ண காத்தி செக்டார் பகுதியில் நேற்று இரவு நடந்த இத்தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். கடந்த 3 நாட்களில் 8வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதே போல் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையின் 180வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று இரவு ஏவுகணை குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.