தாமதமாகும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் ஜூலை 1ம் தேதி நிச்சயம் ஜிஎஸ்டி அமல்
6/13/2017 5:05:28 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி நிச்சயம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொருட்களுக்கு வரி நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், மாநில அரசுகளின் கருத்துகளை பெறவும் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. கடந்த 16 முறை கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் 1500க்கும் அதிகமான பொருட்களுக்கு வரி நிர்ணயம் செய்வது தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவு செய்தது. இன்னும் ஒரு சில பொருட்களுக்கு வரி நிர்ணயம், லாட்டரி சீட்டுகள் வரி தாக்கல் செய்வதில் டிஜிட்டல் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்பட உள்ளது.
இது வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள அடுத்த கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் வருகிற ஜூலை 1ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் தாமதமாகும் என்று கூறப்படுவது அனைத்தும் வதந்திகளாகும். நிச்சயம் வருகிற 1ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலாகும். தயவு செய்து இது போன்ற தவறான தகவல்களை தெரிவித்து மக்களை குழப்ப வேண்டாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.