நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேகமாக பரவும் டெங்கு
6/13/2017 5:02:15 PM
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணாபுரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். கடந்த வாரம் இப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி அபி ஷாலினி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பூசைத்தாய்(52) என்பவர் டெங்குவுக்கு பலியானார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முகேஸ்குமார்(9), நந்தினி(8), ரஞ்சிதா(6), முகில்(4), காவ்யா(1), சவுந்தர்யா(17), ரம்யா(17), சஞ்சய்(4) ஆகிய 8 பேரும், சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியில் உள்ள நேரு தெருவைச் சேர்ந்த சீதாராமன் மனைவி கைலாசம்மாள்(52), முன்னாள் பஞ். துணை தலைவர் ஜலாலுதீன் மகள் தாஜ் அப்சாள்(17), சுபிக்ஷா(4), மருத்துவ மாணவி மலர்மதி (19), அவரது சகோதரி நந்தினி(18), சாகுல் ஹமீது மகள்கள் சாயிராபானு, நபிசாள் பீவி, முருகேசன் மகன் அபிஷேக் (14) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு அடுத்தபடியாக சங்கரன்கோவிலில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. 2 பேர் பலியான நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தும் சுகாதாரத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கலெக்டர் தனி கவனம் செலுத்தி, சங்கரன்கோவிலில் டெங்கு பாதித்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.