பைக்குகள் மோதல் கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி
6/13/2017 5:01:08 PM
ஆத்தூர்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி செல்வராணி (40). இவர்களுக்கு கஸ்தூரி (20) என்ற மகளும், வெங்கடேசன் (16) என்ற மகனும் உள்ளனர். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் கஸ்தூரிக்கு திருமணமாகி விட்டது. வெங்கடேசன் பிளஸ் 1 படித்து வந்தார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி, பேறுகால விடுப்பு கேட்பதற்காக தம்பி மற்றும் தாயுடன் நேற்று கல்லூரிக்கு பைக்கில் புறப்பட்டார். ஆத்தூர் சர்வீஸ் ரோட்டில் இருந்து கல்லூரிக்கு திரும்பியபோது, புதுவையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த பைக்கும், வெங்கடேசன் ஓட்டிச் சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் செல்வராணி, கஸ்தூரி, வெங்கடேசன் ஆகியோரும், எதிரே பைக்கில் வந்த நபரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர், நால்வரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புதுவையில் இருந்து வந்த வாலிபர் பலியானார். கஸ்தூரி உள்ளிட்ட 3 பேரும், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி, அவரது தம்பி வெங்கடேசன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விபத்தில் பலியான வாலிபர் புதுவையை சேர்ந்த ராஜசேகர் (27) என்பதும், பிடெக் படித்துள்ள அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.