கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட்களுக்கு பென் டிரைவ் கொடுக்க வந்த 2 பேர் கைது
6/13/2017 4:58:23 PM
கோவை:கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கடந்த 2015ம் ஆண்டு பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் ரூபேஸ், அவரது மனைவி சைனி, அனூப்மேத்யூ, வீரமணி, கண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரூபேஸ் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அனூப்மேத்யூ, சைனி ஆகியோரை பார்க்க நேற்று கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காட்டை சேர்ந்த அம்சா மகன் ரஷீத்(36), திருவனந்தபுரம் அடுத்த கோட்டையை சேர்ந்த சங்கரராமன் மகன் ஹரிஹரசர்மா(32) ஆகியோர் அனுமதி பெற்று வந்தனர். மத்திய சிறை தெற்கு கேட் அருகே இவர்கள் கொண்டு வந்த பேக்கை சிறை காவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த துணி பேக்கில் பென் டிரைவ் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதை அறிந்த இருவரும் சிறைகாவலர்களை மிரட்டினர். இது தொடர்பாக ஜெயில் வார்டர் எட்வின் சந்திரபாபு ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இருவரையும் இன்று காலை கைது செய்தார். இருவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கோவை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.