ஜனாதிபதி தேர்தல் நாளை வேட்பு மனு தாக்கல்
6/13/2017 4:16:04 PM
புதுடெல்லி: ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 28-ம் தேதி. வேட்புமனு பரிசீலனை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதி நடைபெறும். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் ஆளும் பாஜ கூட்டணி மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆகியவை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் பாஜ வேட்பாளர் யார் என்ற மர்மம் நிலவி வரும் வேளையில், வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவை அதன் தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெட்லி, வெங்கய்யா நாயுடு ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார். இதையடுத்து, எதிர்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கார்கே, ஜேடியூ தலைவர் சரத் யாதவ், ஆர்ஜேடி தலைவர் லாலு, சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, திரிணாமுல் எம்பி டெரக் ஓ பிரையன், என்சிபி தலைவர் பிரபுல் படேல், ராம் கோபால் வர்மா, சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையில் பாஜ தரப்பில் நியமிக்கப்பட்ட குழுவினர் எதிர்கட்சிகளுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்கட்சிகளின் 10 பேர் கொண்ட குழு நாளை கூடி ஆலோசிக்க உள்ளது.